சாராயம் கடத்திய 6 பேர் கைது
சீர்காழி பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பாலம், நெய்த வாசல் ரோடு சந்திப்பு, ஆலங்காடு முனீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் சீர்காழி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் சோதனை செய்தனர். இந்த மூட்டைகளில் 440 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சாராயம் கடத்திய 6 பேர் கைது
விசாரணையில் அவர்கள் ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த அகோரம் மகன் மணிகண்டன் (வயது23), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுதாகர் (25), சின்ன பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் நீதிராஜன் (23), அதே பகுதியை சேர்ந்த வைரம் மகன் கவியரசன் (24), டி. மணல்மேடு பகுதியை சேர்ந்த குமார் மகன் சந்தோஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் பிரபாகரன் (25) ஆகிய 6 பேர் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.