அரிவாளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது
ராமநாதபுரத்தில் அரிவாளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் அரிவாளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி
ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குத்தரவை அப்துல்ரசாக் மகன் சீனிரபியூதீன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் ராமநாதபுரம் வந்துவிட்டு பழைய பஸ்நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டி அவர் சட்டைபையில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டார்களாம். அவர் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து கண்டித்துள்ளனர். பொதுமக்களையும் அரிவாளை காட்டி மிரட்டினார்களாம். இதுகுறித்து சீனிரபியூதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் ராமு மகன் அருண்குமார் என்ற மண்டை அருண் (27), நாகராஜ் மகன் சம்பவ கார்த்திக் (25), ரவீந்திரன் மகன் சக்திதாஸ் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த பணம் பறிக்க பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் கைது
ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மகன் சுடலைமுத்து (27). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் சவாரி சென்றுவிட்டு முதுனாள் பைபாஸ் சாலையில் வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுடலைமுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுடலைமுத்து கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் 3 பேரும் தப்பி ஓடிவிட்டார்களாம். இதுகுறித்து சுடலை முத்து அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த ஏகாந்தமூர்த்தி மகன் சுருளி ஸ்ரீகாந்த் (27), முதுனாள் ராஜ்குமார் மகன் அழகேஸ்வரன் (26), மல்லல் தர்மராஜ் மகன் குருமூர்த்தி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.