மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு பகுதியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் படுத்து இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
6 பேர் கைது
விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டையை சேர்ந்த சாந்தகுமார் (வயது 19), பாலமுரளி (19) மற்றும் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் (22), கீழ்வேளுர் பகுதி மேலவெண்மணி கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகியோர் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.