திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 6 பேர் கைது

நாவலூர் அருகே திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-14 20:55 GMT

நாவலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்த தாழம்பூர் ஊராட்சிக்குட்பட்ட காரணை நேரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்தார். நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு சென்று பார்த்தபோது ஆண் ஒருவர் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரை இளைஞர்கள் பிடிக்க முற்பட்டனர்.

திடீரென அவர் கற்களால் இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இளைஞர்கள் அவரை மடக்கி பிடித்து கைகளை கட்டி சரமாரியாக கம்பி, கட்டை, கைகளால் பலமாக தாக்கியதாக தெரிகிறது.

கொலை

இது குறித்து தகவலறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது பெயர் கேசட்ரா மோகன் பர்மன் (வயது 43) என்பதும், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அவர் தாழம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கட்டுமான தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 மாதமாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்று இறந்து போனார்.

கைது

இதையடுத்து வடமாநில தொழிலாளியை தாக்கியதாக காரணை நேரு தெருவை சேர்ந்த ஆனந்த் (32), ராஜா ஸ்ர (28), உதயகுமார் (37), விக்னேஷ் (29), பாலமுருகன் (33), ரமேஷ் (28) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்