மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சம் அபேஸ்
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
கள்ளக்குறிச்சி
விவசாயி
தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மணிகண்டன்(வயது 43). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு பெட்டியில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி-கச்சேரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
அலுவலகத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டன் கிரயம் சம்பந்தமான விவரத்தை கேட்பதற்காக அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
ரூ.6 லட்சம் அபேஸ்
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு பெட்டியின் மேல் மூடி திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் உள்ளே வைத்திருந்த ரூ.6 லட்சத்தை யாரோ மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனால் பரிதவித்த மணிகண்டன் அக்கம்பக்கத்து இடங்களில் பணத்தை தேடி அலைந்தார். மேலும் அங்கு நின்றுகொண்டிருந்த நபர்களிடமும் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு பெட்டி திறந்து கிடந்தது பற்றி கேட்டார். ஆனால் யாரும் தங்களுக்கு எதுவும் தொியாது என கூறிவிட்டனர்.
போலீசார் வலைவீச்சு
பின்னர் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பக்காவட்டு பெட்டியை உடைத்து ரூ.6 லட்சத்தை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.