அரசு பஸ்சில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தப்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை போலீசார் என 25-க்கும் மேற்பட்ட போலீசார் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை தீவிர வாகன தணிக்கை செய்தனர்.
6 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்த நிலையில் திருப்பதியில் இருந்து கரூர் செல்லும் அரசு பஸ் காட்பாடி சோதனைச்சாவடி வழியாக வந்தது. அந்த பஸ்சில் காட்பாடி சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் ஏறி சோனை செய்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் பை வைத்திருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ராகுல்தாஸ் (வயது 25) என்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.