சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்
கரூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
முதியவர் பலி
கரூர் சின்னஆண்டாள் கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 60). இவர் மோட்டார் சைக்கிளில் கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சசிகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சசிகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 பேர் படுகாயம்
சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை கரூர் பஸ் நிலையம் வந்தது. பின்னர் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் கோவை ரோடு அருகே வந்தபோது, பெங்களூருவில் இருந்து கரூரை நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக, அரசு பஸ்சின் முன் பகுதியில் மோதியது. இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது.இந்த நிலையில், ஆம்னி பஸ் டிரைவர் பாண்டியன் படுகாயம் அடைந்து அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. மேலும், அரசு பஸ்சில் பயணம் செய்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.