கீழ்வேளூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
ஜாமீனில் வந்தார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சி கடம்பங்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல்(வயது 50) விவசாயி. இவருக்கு 4 மகள்கள். இவர்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மனைவி முத்துலட்சுமி மீது கோபத்தில் இருந்து வந்த சிங்காரவேல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி இரவு மனைவி முத்துலட்சுமியை மூங்கில் கட்டையால் தாக்கி கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் சிங்காரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்காரவேல் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நேற்று காலை கடம்பங்குடி மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் சிங்காரவேல் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழ்வேளூர்-ஒர்குடி சாலையில் உள்ள சித்தாறு வடிகால் ஆற்றுப்பாலம் அருகே மறைவான பகுதிக்கு சென்றுள்ளார்.
விசாரணை
அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிங்காரவேலுவின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சிங்காரவேலு ரத்த வெள்ளத்தில் பலியானர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிங்காரவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலுவின் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
6 பேர் கைது
இந்த கொலை வழக்கில் சிங்காரவேலின் அண்ணன் மாரியப்பன் மகன் கடம்பங்குடி மேலத்தெருவை சேர்ந்த வினோத் (28), அவரது தம்பி வினோகரன் (26) மற்றும் வடுவக்குடி சூரமங்கலம் செட்டி தெருவை சேர்ந்த ராஜாராமன் மகன் ரவீந்திரன் (28), நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பபை சேர்ந்த வேலவன் மகன் மனோஜ் (29), அகர செம்பியன்மகாதேவி வடக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் கருணாகரன் (26), வடுவக்குடி சூரமங்கலம் செட்டி தெருவை சேர்ந்த மணிமாறன் மகன் தாமோதரன் (32) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இ்தையடுத்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் நேற்று காலை கீழ்வேளூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.