டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மது விற்பனை - 6 பேர் கைது

கோத்தகிரி அருகே டாஸ்மாக் மது பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக மதுபாட்டில்களை விற்ற 6 பேர் கைது.

Update: 2022-06-11 09:43 GMT


நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட பணி நேரத்திற்கு முன்னதாகவும், இரவு 10 மணிக்கு பிறகும் சில டாஸ்மாக் மதுக்கடை பார்களில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபட்டு வருவதாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி சிறப்பு தனிப்படை போலீசார் இன்று காலை 9 மணிக்கு கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 3 பேர் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் சிவகங்கையை சேர்ந்த கார்த்திக்(30), கோவையை சேர்ந்த முகமது பாரூக் (45), மதுரையைச் சேர்ந்த சதீஷ் சிவா(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 102 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூ.12,720 பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கோத்தகிரி எஸ். கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரிலும் சோதனை நடத்தினர். அங்கும் அனுமதியை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பணிபுரியும் டாஸ்மாக் பார் ஊழியர்கள் மதுரையைச் சேர்ந்த ராஜு(32), அறந்தாங்கியைச் சேர்ந்த அன்பரசன்(26), எஸ்.கைகாட்டியைச் சேர்ந்த கமலநாதன்(60) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்ற பணம் ரூ. 17,710 பறிமுதல் செய்தனர்.

இன்று ஒரே நாளில் போலீசார் நடத்திய சோதனையில் 130 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்