20 வாய்ப்பாடுகளையும் ஒப்பித்த 5-ம் வகுப்பு மாணவி

திருவாரூரில், விடுமுறை நாட்களை பயன்படுத்தி 20 வாய்ப்பாடுகளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த மாணவி, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

Update: 2022-07-05 17:45 GMT

திருவாரூர்:

திருவாரூரில், விடுமுறை நாட்களை பயன்படுத்தி 20 வாய்ப்பாடுகளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த மாணவி, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

வாய்ப்பாடு ஒப்பித்தல்

திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை தங்களது பள்ளியில் நடைபெற்ற காலை இறைவணக்க வழிபாட்டில் விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் ஒன்றிலிருந்து 20 வரையிலான வாய்ப்பாடுகளை படித்து திங்கட்கிழமை அன்று வந்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகள் தனது இருக்கையில் அமரலாம் என்று அறிவித்தார்.இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் எப்படியாவது 20 வாய்ப்பாடுகளையும் ஒப்பித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர தீவிரமாக படித்தனர்.

டிரைவரின் மகள்

அவர்களில், திருவாரூர் அருகே பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த டிரைவரான சதீஷ்-பானுமதி தம்பதியின் மகளும், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியுமான சபிதா தங்கு தடையின்றி 20 வாய்ப்பாடுகளையும் திங்கட்கிழமை ஒப்பித்தார்.இதனையடுத்து தலைமை ஆசிரியர் சுமதி, வகுப்பு ஆசிரியர் ராதிகா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவி சபிதாவை பாராட்டியதோடு தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து கவுரவித்து கிரீடம் அணிவித்தனர். அப்போது சக மாணவ-மாணவிகள் கை தட்டி மாணவி சபிதாவை பாராட்டினர்.அப்போது அந்த மாணவி தனக்கு கிடைத்த கவுரவத்தை எண்ணி கண்ணீர் மல்க தலைைம ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைக்கு நன்றி தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில்...

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவி மற்றும் மாணவியை ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் ஆகியோரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து மாணவி சபிதா கூறுகையில், எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. 20 வாய்ப்பாடுகளையும் ஒப்பித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.தலைமை ஆசிரியர் சுமதி கூறுகையில், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும், கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையிலும் இதனை செய்ததாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்