தமிழகத்தில் 5,784 ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன

தமிழகத்தில் 5,784 ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-17 20:21 GMT

தமிழகத்தில் 5,784 ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜவுளி விற்பனை

மதுரை கோச்சடையில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் புதிய ஜவுளி விற்பனை நிலையத்தின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் முன்னிலை வகித்தார். இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத்தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மொத்தம் ரூ.64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 17.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 443 கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிகளும், 1.59 லட்சம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ. ஆயிரத்து 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், 2.86 லட்சம் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1 339 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ்

தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 941 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக்கடைகளும், 9,923 பகுதிநேரக் கடைகளும் அடங்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 5,784 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கூடுதலாக 5 ஆயிரம் ரேஷன் கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் ரேஷன் கடைகளில் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக பணியாளர்களின் நலனை கருத்திற்கொண்டு நிர்வாக ரீதியான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் உசிலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள கரும்பு அறுவடை எந்திரத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து எந்திரத்தை இயக்கி ெதாடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்