சரக்கு வேன்களில் கடத்தி வந்த ரூ.55 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சரக்கு வேன்களில் கடத்தி வந்த ரூ.55 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-20 21:11 GMT

புகையிலை பொருட்கள் கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக திருச்சி கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த 2 சரக்கு வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வெங்காய மூட்டைகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த மூட்டைகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து 2 சரக்கு வேன்களில் இருந்த மொத்தம் 1,070 கிலோ புகையிலை பொருட்களையும், சரக்கு வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.55 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சேகர் (வயது 28), கிருஷ்ணகிரி ஓசூர் தாலுக்கா பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனா என்கிற சீனிவாசன் (27), தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ்(28), முரளிகுமார் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்