53 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதி இல்லாததால் 53 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2023-05-18 20:38 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதி இல்லாததால் 53 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆய்வு பணியை கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் மேற்கொண்டனர்.

அப்போது வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி, கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார், மாணவர்கள் புத்தக பை வைக்கும் அடுக்கு உள்ளிட்ட 16 விதமான அம்சங்கள் வாகனங்களில் உள்ளதா? என ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்பட்டது.

53 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

ஆய்வின் போது பல வாகனங்களில் முன் புறமும், பின்புறமும் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தாமல் இருந்தது தெரியவந்தது. அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். மேலும் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தி விட்டு வரும்படி அறிவுரையும் வழங்கினர். இதே போல ஒரு சில வாகனங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர்.

அந்த வகையில் ஆய்வு செய்யப்பட்ட 396 வாகனங்களில் மொத்தம் 53 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகளை சரி செய்து விட்டு மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் வாகனத்தை காண்பித்து அனுமதி பெறலாம் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்