அரியலூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 5,192.22 கோடி முன்னுரிமை கடன்களாக வழங்க திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 5,192.22 கோடி முன்னுரிமை கடன்களாக வழங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-21 19:26 GMT

அரியலூர் மாவட்ட வங்கிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் ரூ.5,192.22 கோடி முன்னுரிமை வங்கி கடன்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களுக்கு ரூ.4,335.23 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.738.98 கோடியும், கல்விக்கடன் ரூ.27 கோடியும், வீடு கட்டுவதற்கு ரூ.45 கோடியும் மற்றும் பிற முன்னுரிமை தொழில்களுக்கு ரூ.46.01 கோடியும் என மொத்தம் ரூ.5,192.22 கோடி அனைத்து வங்கிகளும் இணைந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தயாரித்த செறிவு சார் கடன் திட்ட அறிக்கையை ஆதாரமாக கொண்டு இந்த முன்னுரிமை கடன் திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அரியலூர் நகராட்சியைச் சேர்ந்த 2 சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் தலா ரூ.50 ஆயிரத்துக்கான வாழ்வாதார மேம்பாட்டு வங்கி கடன் உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் முருகண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட், நபார்டு வங்கி மேலாளர் பிரபாகரன், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி அமிருதவள்ளி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லஷ்மி மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்