சேலத்தில் இருந்து காசிக்கு 51 பேர் பயணம்-தமிழ் சங்கமம் சிறப்பு ரெயிலில் சென்றனர்
சேலத்தில் இருந்து காசிக்கு 51 பேர், தமிழ் சங்கமம் சிறப்பு ரெயிலில் சென்றனர்.
சூரமங்கலம்:
சிறப்பு ரெயில்
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை மற்றும் சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று இயக்கப்பட்டது.
எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் பயணம் செய்கின்றனர்.
உற்சாக வரவேற்பு
எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 7.20 மணிக்கு வந்தது. அந்த ரெயிலுக்கு சேலம் பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலத்தில் இருந்து புறப்பட்ட 51 பயணிகளுக்கு சிறப்பான வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
சேலம் பயணிகளை சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், உதவி வணிக மேலாளர்கள் பாண்டுரங்கன், மாயா பீதாம்பரம்,ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சதீஷ் பாபு, ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், நிலைய மேலாளர் (வணிகம்) அய்யாவு ஆகியோர் வரவேற்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் ரெயில் வந்ததும் அவர்களை சிறப்பு பெட்டிகளில் அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட பார்வையாளர் முருகேசன், மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்டத் துணைத் தலைவர்கள் ரமேஷ், பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சசிகுமார், அருண்குமார், மண்டல தலைவர்கள் பாலமுருகன், கண்ணன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.