திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டி கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய 500 சேவல்களை பலியிட்டு அன்னதானம்
திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டி கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட 500 சேவல்கள் பலியிட்டு அன்னதானம் நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டி கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட 500 சேவல்கள் பலியிட்டு அன்னதானம் நடந்தது.
முனியாண்டி கோவில்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கீழக்குயில்குடி ஊராட்சி தட்டானூரில் பழமை வாழ்ந்த முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் கொத்துவ புளி மகாமுனியாண்டி சுவாமியும், பெண் மகாமுனி சுவாமியும் அருள்பாலிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று ஆடி பெருக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி முனியாண்டி சுவாமிக்கு பொங்கலிடுதல் மற்றும் சேவல் காணிக்கை செலுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள கீழக்குயில்குடி, விளாச்சேரி, தனக்கன்குளம் மற்றும் பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
500 சேவல்கள் காணிக்கை
குழந்தை வரம், திருமண பாக்கியம், தொழில் வளர்ச்சி போன்ற வேண்டுதல் நிறைவேறியதால் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கையாக கோவிலுக்கு வழங்கினர். இந்த சேவல்கள் பலியிடப்பட்டு கோவில் வளாகத்திலேயே கறிவிருந்து தயார் செய்யப்பட்டது. மதியம் 1 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இடைவிடாது சுமார் 9 மணிநேரம் அன்னதானம் நடந்தது.
இதே கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கிடாய்கள் வெட்டி கறிவிருந்து நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.