திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையை யொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்க பஜாரில் அலை மோதுகின்றனர். இதனால் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பஜார் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றனர். மாலை நேரத்தில் பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஜார் மற்றும் நகைக்கடை பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், திருட்டு, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து டிரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.