500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் சாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கிய 21 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் சாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கிய 21 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கனமழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 15 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் ஏற்காட்டுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இரவிலும் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அங்கிருந்து வரும் வரட்டாற்று ஓடை, ராஜவாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருந்து சேலம் பள்ளப்பட்டி ஏரி வரை செல்லும் வரட்டாற்று ஓடையில் தண்ணீர் அதிகளவில் சென்றது.
இதனால் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் குப்பை கழிவுகளால் திடீரென அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஓடையில் வந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் பரிதவிப்பு
இதேபோல், கோவிந்த கவுண்டர் தோட்டம், தோப்புக்காடு, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உதவி செய்தனர். மேலும் சேலத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் விடிய, விடிய பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். வீடுகளில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வெளியேற்றினர்.
இதனிடையே, லீ பஜார் அகிலாண்டேஸ்வரி ஓடை பகுதியில் 6 வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்களால் வெளியே வரமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று 6 வீடுகளில் இருந்த 21 பேரை படகில் சென்று மீட்டனர். பின்னர் அவர்கள் பள்ளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
வெள்ளப்பெருக்கு
சேலம் ஏ.டி.சி.நகரில் உள்ள தரைப்பாலத்தில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் பாலத்தில் செல்வதை தவிர்க்கும் வகையில் அங்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் பெய்த கனமழையால் புதுஏரியில் தண்ணீர் அதிகளவில் வெளியேறுகிறது. மேலும், பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள செங்கலணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சரபங்கா ஆறு
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் பெய்த கனமழையால் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சக்கரசெட்டிபட்டி, காமலாபுரம், கிழக்கத்திக்காடு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், சோளம் வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மேலும் கிழக்கத்திக்காடு பகுதியில் சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கயிறு கட்டி ஆற்றை கடந்து சென்றனர். இதேபோல் எம்.செட்டிபட்டி ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக பெரியேரிப்பட்டி செல்லும் தார் சாலை தண்ணீரில் மூழ்கியது. பள்ளி மாணவ-மாணவிகள் முழங்கால் அளவு தண்ணீரில் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எம்.செட்டிபட்டி ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் தண்ணீர் ஓடுவதால், அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை கட்டி உதவியபடி கடந்து சென்றனர். எனவே அங்கு தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடு இடிந்தது
எடப்பாடி நகரில் சரபங்கா ஆற்றில் கரையோர குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு நூலகம் மற்றும் நகராட்சி தொடக்கப்பள்ளியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவிலான வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பரிதவித்தனர்.
மேலும் நைனாம்பட்டி அருகே வெள்ளம் சூழ்ந்ததால் ஒரு வீடு இடிந்து விழுந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், பாதிப்பு ஏற்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் எடப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, ஆணையாளர் சசிகலா மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
போக்குவரத்து தடை
இளம்பிள்ளை அருகே உள்ள மேல்மாடையாம்பட்டி வழியாக செல்லும் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு உள்ள தரைப்பாலம் ஆற்று நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மேல்மாடையாம்பட்டி, சின்னப்பம்பட்டி பகுதிகளில் ஆற்று வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. .இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் சின்னப்பம்பட்டி இருந்து கொங்கணாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் செங்கல்சூளை பகுதியில் இருந்து கரட்டூர், பாச்சாலியூர், செங்காடு செல்லும் பிரிவு ரோடு சரபங்கா ஆற்று நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்கள் சிரமப்பட்டனர்.
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
ஓமலூர்-99.4, ஏற்காடு-66.4, சேலம்-23.8, ஆணைமடுவு-21, மேட்டூர்-16.2, கரியகோவில்-13, பெத்தநாயக்கன்பாளையம்-8, எடப்பாடி-5.6, சங்ககிரி-4, ஆத்தூர்-4, தம்மம்பட்டி-2.