500 வாழைகள் முறிந்து சேதம்
தேவர்சோலை பகுதியில் சூறாவளி காற்றுக்கு 500 வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
தேவர்சோலை பகுதியில் சூறாவளி காற்றுக்கு 500 வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சூறாவளி காற்று
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், இரவில் குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மேலும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தரையில் ஐஸ்கட்டிகள் சிதறி கிடந்தன. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையில் காய்ந்த மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் சில வீடுகளின் மேற்கூரைகளும் உடைந்து விழுந்தன.
வாழைகள் விழுந்தன
இந்தநிலையில் பாடந்தொரை, தேவர்சோலை, தேவன், மேபீல்டு உள்பட பல இடங்களில் வாழைகள் அறுவடைக்கு தயாராக நின்றிருந்தன. சூறாவாளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க மடியாமல் நூற்றுக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தது. இதனால் சில நாட்களில் அறுவடை செய்யப்பட இருந்த வாழைகள் சரிந்து கீழே கிடக்கிறது. இதன் காரணமாக பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்து விட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கிடையில் சேதம் அடைந்த வாழைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறும்போது, இதுவரை 500 வாழைகள் சேதம் அடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றனர்