50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

நாகையில், கடல் சீற்றம் காரணமாக நேற்று 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2022-12-20 18:45 GMT

நாகையில், கடல் சீற்றம் காரணமாக நேற்று 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி உயரத்துக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்தன.

கரை திரும்ப அறிவுறுத்தல்

நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகின்றனர். நாகை அக்கரைப்பேட்டை முகத்துவாரம் அருகே வரும் படகுகள் கடும் சிரமத்துடன் கரை திரும்பியது.

மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக நேற்று நாகை, அக்கரைபேட்டை, வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 700 விசைப்படகுகள், 4500 பைபர் படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

வெறிச்சோடிய கடற்கரை

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்