கருமந்துறை மலை கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

கருமந்துறை மலை கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-05-18 20:40 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

தைலம்மாள் கோவில்

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே மலை கிராமமான நவம்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற தைலம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவம்பட்டு மற்றும் 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மிகவும் பழமையான இந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோவிலில் பூசாரியாக தீர்த்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் பூஜைகளை முடித்து விட்டு, கோவிலை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தார்.

50 பவுன் நகை திருட்டு

அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 50 பவுன் சாமி நகைகள் திருடப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த சில்லறை காசுகள் சிதறி கிடந்தன. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கருமந்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்ததும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் 'ரிசிவரையும்' மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் சேலத்தில் இருந்து மோப்பநாய் மேகா வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அது கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கோவிலில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.

இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மலை கிராமத்தில் உள்ள கோவிலில் 50 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்