நகைக்கடையில் 50 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை

காரமடையில் ஷட்டரை உடைத்து நகைக்கடையில் 50 பவுன் நகை, 6 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-19 18:45 GMT

காரமடை

காரமடையில் ஷட்டரை உடைத்து நகைக்கடையில் 50 பவுன் நகை, 6 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகைக்கடை

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 51). இவருடைய மனைவி சாந்தாமணி. இவர்கள், அங்குள்ள கார் ஸ்டேண்டு பகுதியில் 'சோலையன் ஜூவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த நகைக்கடையின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்து வியாபாரிகள் செல்போன் மூலம் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர், தனது மனைவியுடன் அங்கு விரைந்து வந்தார்.

தங்கம், வெள்ளி

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் கடையில் இருந்த 50 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, கடையின் பூட்டையும், ஷட்டரையும் கடப்பாரையால் உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. மேலும் தங்கம், வெள்ளி மட்டுமின்றி போலீசில் சிக்கி கொள் ளாமல் தப்பிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது கடையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்