கிராமப்பகுதிகளில் நாட்டுக்கோழி பண்ணை அமைப்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம்- கலெக்டர் தகவல்

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-16 19:03 GMT

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை

கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் தொழில் முனைவோரை கண்டறிந்து கோழிப்பண்ணைகள் நிறுவ ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர். 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிப்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி போன்றவை பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருப்பதற்கான ஒப்புதல் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும்.

50 சதவீத மானியம்

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும்.

பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 ஆண்டுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதி மொழி உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று 19-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்