அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற 50 பேர் கைது

அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-16 18:11 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் கீழக்குடிகாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று லெப்பைக்குடிகாடு பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முடிவு செய்து நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் 10 பேர் ஒன்று திரண்டனர். இதனை அறிந்த மங்களமேடு போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற நீர் ஆதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 40 பேர் ஒன்று திரண்டு அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அமைச்சர் சென்ற பிறகு அவர்களை விடுவித்தனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்