திருத்தணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.50 லட்சம் வருமானம்

திருத்தணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.50 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-28 12:40 GMT

ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணிக்கு இயக்கப்பட்ட 170 சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.50 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

170 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி கிருத்திகை திருவிழா கடந்த 23-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மலர்காவடி ஏந்தியபடி திருத்தணி, வள்ளிமலை, ரத்தினகிரி, காங்கேயநல்லூர், தீர்த்தகிரி, மகாதேவமலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். நடைபாதையாக பலர் காவடி சுமந்து முருகன் கோவிலுக்கு சென்று தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு சென்றார்கள். அவர்களின் வசதிக்காக வேலூர் மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து திருத்தணிக்கு 170 சிறப்பு பஸ்கள் கடந்த 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட்டன.

ரூ.50 லட்சம் வருமானம்

இந்த சிறப்பு பஸ்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு பயணம் செய்து முருகனை வழிபட்டனர். அவர்கள் அங்கிருந்து திரும்பி வருவதற்கும் தேவையான பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் மண்டலத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 4 நாட்களில் ரூ.50 லட்சம் கூடுதல் வருமானம் போக்குவரத்துக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் தற்போது பெண்களுக்கு பஸ்களில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் கூடுதல் வருமானம் குறைந்துள்ளது என்று வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்