பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாலக்கோடு
சின்னாறு அணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் சின்னாறு அணை தனது முழு கொள்ளளவை நேற்று முன்தினம் எட்டியது. இதன் காரணமாக அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே சின்னாற்றில் திறந்து விடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி இந்த நீர்வரத்து முழுவதுமாக மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 2-வது நாளாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக சின்னாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கூடாது என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
சின்னாற்றில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஅள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.