சேலத்தில் மாயமான 5 மாணவர்கள் கரூரில் மீட்பு

சேலத்தில் மாயமான 5 மாணவர்கள் கரூரில் மீட்கப்பட்டனர்.

Update: 2022-10-30 20:40 GMT

மாணவர்கள் மாயம்

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் ரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் 10-ம் வகுப்பும், அவனது தம்பியான 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேலும் 15, 13 வயது கொண்ட அண்ணன்-தம்பி முறையே 10, 8-ம் வகுப்புகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் 5 பேரும் கடந்த 21-ந் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்கள் அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று கேட்டனர்.

அப்போது தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

கரூரில் மீட்பு

இதற்கிடையில் மாயமான மாணவர்களில் ஒருவன் தனது தந்தையின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினான். அப்போது அவன், நாங்கள் 5 பேரும் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்றும், எங்களை தேட வேண்டாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோர் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மாணவன் ஒருவன் ராசிபுரம் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. மேலும் அந்த மாணவர்கள் அங்கிருந்து கரூருக்கு சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை கேட்டுள்ளனர். இவர்களை பார்த்ததும் சந்தேகமடைந்த ஓட்டல் உரிமையாளர் வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த போலீசார் அங்கு சென்று மாணவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில் சேலத்தில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணை

பின்னர் இதுகுறித்து சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களை மீட்டு சேலத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர்களை சேலத்தில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தி பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்