கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-05-24 18:45 GMT

திருவண்ணாமலை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசார் குறித்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டார். விற்பனை குறித்து உரிய தகவல் கிடைத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், பணியை சரியாக செய்யாத போலீசாரை அவர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

அதன்படி கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள், தானிப்பாடி போலீஸ் ஏட்டுகள் நிர்மல், பாபு, செங்கம் தலைமை காவலர் சோலை, சேத்துப்பட்டு போலீஸ் ஏட்டு ஹரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகார் வரப்பெற்ற போலீசார் குறித்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்