உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் -அன்புமணி ராமதாஸ் கருத்து

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கருத்து.

Update: 2022-06-29 21:55 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது.

தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்துவிட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவு பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், பிற அத்தியாவசிய தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகள் மத்திய-மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்