லாரியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர்
ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
கோவையில் போலீசார் ரோந்து மற்றும் சோதனை நடத்தி கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் கவுண்டம்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த கோவையை சேர்ந்த தங்கபாண்டி (வயது 38), சுந்தராபுரத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (64), மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் (25), சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (20), சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியை லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.