ஆற்காடு கோர்ட்டில் 5 பேர் சரண்
சென்னை மதுரவாயலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆற்காடு கோர்ட்டில் 5 பேர் சரண் அடைந்தனர்.
சென்னை மதுரவாயல் வானகரம் கன்னிமா நகர் பகுதியை சேர்ந்தவர் கிழங்கு சரவணன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு வானகரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை சரிமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். அவரை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கோபால் (33), கன்னியப்பன் (38), சையத்அலி (33), நித்யானந்தம் (42), பவித்ரன் (31) ஆகிய 5 பேர் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தீபிகாஹேமகுமார் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார்.