நுங்கம்பாக்கத்தில் போதைபொருளுடன் பெண் உள்பட 5 பேர் கைது
நுங்கம்பாக்கத்தில் போதைபொருளுடன் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே போதைப்பொருள் கும்பல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர். அப்போது அங்கு மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருள் வைத்திருந்த மும்பை ஒக்கேரி நகரை சேர்ந்த கணேஷ் (வயது 37), கோயம்பேடு கொடுங்காளியம்மன் தெருவை சேர்ந்த திருமலை (34), திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த பிரிதிவிராஜ் (25), கோயம்பேடு மேட்டுகுளம் பகுதியை சேர்ந்த மாலதி (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த தேவராஜ் (42) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 11 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், 3 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.அதேபோல் புளியந்தோப்பு பார்வதி நகர் கக்கன் காலனி பகுதியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த கார்த்திக் (22) கைது செய்யப்பட்டார்.