கோவை வாலிபர் உள்பட 5 பேர் கைது

மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளை அடிக்க முயன்ற கோவை வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-05 18:45 GMT

மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளை அடிக்க முயன்ற கோவை வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளை முயற்சி

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக ஊட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த்(வயது 46) பணியாற்றுகிறார். இவர் கடையில் வசூலான ரூ.10 லட்சத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த கடந்த 31-ந் தேதி மதியம் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆலாங்கொம்பு அருகே வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர். இதை கண்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ஆனந்தகுமார், சிலம்பரசன் மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகன சோதனை

அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கருமத்தம்பட்டி வரை பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் குழுக்களாக பிரிந்து பட்டுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் அருகே கட்டாஞ்சி மலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் கொள்ளை அடிக்க முயன்ற கும்பல் என தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆகாஷ் (21), முத்துப்பாண்டி (21), லோகநாதன் (22), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரவிக்கண்ணன் (19), பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி அருகே செல்வபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மைலேஸ் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த 3 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்