குளத்தில் மூழ்கி 5 பேர் பலி: தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை
இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தீர்த்தவாரி நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மூவரசம்பட்டு பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர், கோவில் குளங்களை தமிழக அரசு தூர்வார வேண்டும் என்றும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உறுப்பினர்கள் செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர்.
விளக்கம்
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-
நங்கநல்லூர் தர்மலிங்கேசுவரர் கோவிலின் குளம் என்பது அந்த குளம் அல்ல. அது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகின்ற குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டு காலமாகத்தான் தீர்த்தவாரி வைபவம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த கோவிலை நிர்வகிக்கின்றவர்கள் சர்வ மங்கள சேவா சங்கம் டிரஸ்ட் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தி 5 நபர்கள் அதன் நிர்வாகிகளாக இருந்து வருகிறார்கள். கடந்தாண்டு 08.09.2022 அன்று தொல்லியல் துறை அனுமதி, மண்டல குழு அனுமதி, அதே போல் இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழுவான மாநில குழு அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள்.
நடவடிக்கை
எது எப்படி இருந்தாலும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியது விலைமதிக்க முடியாத மனித உயிர்கள். அதில் ராகவன், ராகவா, சூர்யா, விக்னேஷ், யோகேஸ்வரன் என்ற 5 விலை மதிப்பில்லாத உயிர்கள். அவருடைய பெற்றோர்கள், அவர்களுடைய கனவுகள் நேற்றைக்கு சிதைந்தபோது அவர்கள் படுகின்ற துயரத்தை முதல்-அமைச்சர் உணராதவர் அல்ல. இரக்கத்தின் இதயத்தை தன் உள்ளே வைத்திருக்கின்ற முதல்-அமைச்சர் இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக மாவட்டத்தினுடைய அமைச்சரை அழைத்து அந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்று கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கண்டிப்பு
அச்சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் என்னை அழைத்து இப்படி தீர்த்தவாரி வைபவங்கள் நடக்கின்றபோது குளத்தை தூய்மையாகவும், தூர்வாராத நிலையிலும் ஏன் வைத்திருந்தீர்கள் என்று கண்டித்தார். நிச்சயமாக இவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதை இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அதை இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய இழப்பில் அதை ஒரு குற்றமாக சொல்ல நான் விரும்பவில்லை.
இந்த அவையில் உடனடியாக முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து நம்முடைய அமைச்சர் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவர்களின் இறுதி ஊர்வலம் வரை உடனிருந்து அடக்கம் செய்துவிட்டு வந்ததோடு மட்டுமல்லாமல், முதல்-அமைச்சர் தலா ரூ.2 லட்சம் அந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றார்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
வருகின்ற காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கும் அதேபோல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துகின்ற போது சம்பந்தப்பட்ட டிரஸ்டுகள் மற்றும் அமைப்புகள் துறைக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.
அந்த குடும்பத்தாருக்கு அவர்கள் கோருகின்ற உதவிகளில் எவையெல்லாம் செய்து தர முடியுமோ அவையெல்லாம் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் முன்வருவார் என்பதையும் தெரிவித்து அந்த 5 சிறுவர்களை இழந்து வாடும் அந்த குடும்பத்தாருக்கும் உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.