வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-20 21:14 GMT

லால்குடி:

பெண்ணை படம் எடுத்தார்

லால்குடி அருகே கபிரியேல்புரத்தை சேர்ந்த ஸ்டீபன் சந்தானத்தின் மகன்கள் லூர்து ஜெயக்குமார்(வயது 30), தாமஸ் எடிசன்(28). இவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவு வேலை முடிந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் தனியார் பஸ்சில் ஊருக்கு சென்றனர்.

அந்த பஸ்சில் திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வரும் லால்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் பயணம் செய்தார். அந்த பெண்ணை தாமஸ் எடிசன் செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் இது குறித்து தனது அண்ணன் குப்புசாமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

5 பேர் கைது

இதையடுத்து குப்புசாமி, அவரது நண்பர்களுடன் கபிரியேல்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய தாமஸ் எடிசனை அவர்கள் பிடித்து தாக்கினர். மேலும் அதை தடுக்க முயன்ற ஸ்டீபன் சந்தானம், லூர்து ஜெயக்குமார் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் படுகாயமடைந்த லூர்து ஜெயக்குமார் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். ஸ்டீபன் சந்தானம் காயமடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லூர்து ஜெயக்குமாரை அடித்து கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மாந்துறை வீராசாமி மகன் குப்புசாமி (22), அதே பகுதியை ராஜேந்திரன் மகன் சிவா (26), ராஜா மகன் குரு (26), குணசேகரன் மகன் ஆனந்தராஜ் (33), கஜேந்திரன் (36) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்