கல்லூரி பேராசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

திருச்செந்தூர் அருகே கல்லூரி பேராசிரியை கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி திருடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கல்லூரி பேராசிரியை கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி திருடரை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியை

திருச்செந்தூர் குமாரபுரம் அன்பு நகரை சேர்ந்த பாபு மனைவி ஜமுனாராணி (வயது 45). இவர் நெல்லையில் உள்ள ராணி அண்ணா கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவர் பணி முடிந்ததும் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்சில் வந்தார். திருச்செந்தூர் குமாரபுரம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் சுமார் இரவு 7.30 மணியளவில் இறங்கியுள்ளார். அவருடன் கீதா என்பவரும் இறங்கியுள்ளார்.

சங்கிலி பறிப்பு

இருவரும் மெயின் ரோட்டில் வீட்டிற்கு நடந்து சென்ற போது, முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வந்து ஜமுனாராணி கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துள்ளார். அப்போது ஜமுனாராணி தனது சங்கிலியை இறுக்கி பிடித்து கொண்டுள்ளார். அவரும், கீதாவும் திருடன்..திருடன் என சத்தம் போட்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அந்த மர்மநபர் பலமாக இழுத்ததில் 5½ பவுன் தாலி சங்கிலி கையில் சிக்கியுள்ளது. அறுந்த அந்த நகையுடன் மர்ம நபர் இருளில் தப்பியோடி விட்டார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

மீதமுள்ள 2 பவுன் நகை ஜமுனாராணி கையில் சிக்கியது. மர்மநபர் பறித்து சென்ற நகையின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும். இச்சம்பவம் குறித்து ஜமுனாராணி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த வழிப்பறி திருடரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்