விவேகானந்தர் மண்டபத்தை 5 லட்சம் பேர் பார்த்தனர்
கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
சுற்றுலா தலம்
உலகப்புகழ் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியின் சீசன் காலமாக கருதப்படுகிறது.
இதேபோல ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசனாக கருதப்படுகிறது.
5 லட்சம் பேர்
இந்தநிலையில், கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 98 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 2 லட்சத்து 40 ஆயிரம் பயணிகளும், ஜூன் மாதம் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.
கோடை விடுமுறை சீசனின் கடைசி நாளான நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 8 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.