வீட்டில் பதுக்கிய 5½ கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-06 19:30 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனிப்படை அமைத்து உள்ளார். இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியை சேர்ந்த சேக்பரீத் (வயது 24) என்பவர் கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கஞ்சா கேட்பது போன்று நடித்து சேக்பரீத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த டேவிட் பாக்கியராஜ் (36), திண்டுக்கல்லை அடுத்த மருதாசிபுரத்தை சேர்ந்த கோகிலாமேரி (32) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேடப்பட்டியை சேர்ந்த முருகேசன் (60) என்பவரின் வீட்டில் 5½ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 5½ கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்ததோடு, முருகேசனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தெற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன்பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்