5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
தேரூரில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
நாகர்கோவில்,
தேரூரில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
தென்னந்தோப்பில் தீ
தேரூர் கொரண்டியில் உள்ள தென்னந்தோப்பில் காய்ந்த செடி-கொடிகளில் நேற்று மாலையில் தீ பிடித்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள...மள...வென எரிந்து அருகே இருந்த குடிசை வீட்டில் பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர்.
ஆனால் தீயானது அதோடு நிற்காமல் மேலும் பரவி அருகருகே இருந்த 4 வீடுகளிலும் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்துக்கு பிறகு தீயானது முழுமையாக அணைக்கப்பட்டது.
5 குடிசை வீடுகள்
எனினும் அதற்குள் 5 குடிசை வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின. வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தென்னந்தோப்பில் எப்படி தீ பற்றியது என்பது தெரியவில்லை. மூங்கில்கள் உரசியதால் தீ பிடித்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தீயில் 5 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.