கண்டக்டர் இல்லாததால் 5 பஸ்கள் நிறுத்திவைப்பு; பயணிகள் அவதி
தூத்துக்குடியில் கண்டக்டர் இல்லாமல் 5 பஸ்கள் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
தூத்துக்குடியில் கண்டக்டர் இல்லாமல் 5 பஸ்கள் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
இடைநில்லா பஸ்கள்
தூத்துக்குடி-நெல்லை மார்க்கத்தில் இடைநில்லா பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்களில் கண்டக்டர் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பயணிகளை ஏற்றி அவர்களுக்கு பயணச்சீட்டு கொடுத்து விட்டு, கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறங்கிவிடுவார். இதன் பின்னர், நெல்லை கே.டி.சி. நகரில் இருந்து ஒரு கண்டக்டர் இந்த பஸ்சில் ஏறி, அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்வார்.
அதேபோன்று நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் இடைநில்லா பஸ்களில் நெல்லையில் இருந்து கே.டி.சி. நகர் வரை பயணிகள் ஏற்றப்படுவர். அதுவரை உள்ள பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துவிட்டு கே.டி.சி. நகரில் கண்டக்டர் இறங்கிவிடுவார். அந்த பஸ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக பஸ்நிறுத்தம் வந்த பின்னர் அங்கே தயாராக இருக்கும் கண்டக்டர், அந்த பஸ்சில் ஏறிக்கொண்டு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் செல்வார். இவ்வாறு சுழற்சி முறையில் கண்டக்டர்கள் இந்த இடைநில்லா பஸ்களில் பணியாற்றி வருகின்றனர்.
நிறுத்தி வைப்பு
இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக, சுழற்சி முறையில் பஸ்களில் கண்டக்டர்கள் ஏற முடியாததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 5 பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் பயணிகளுடன் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுகுறித்து மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், கண்டக்டர்கள் வரவழைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் அரை நேரத்திற்கு மேலாக பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.