சென்னை வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-09 18:49 GMT

வாலிபர் கொலை

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது. இந்த பிளாட்பாரத்தையொட்டி அமைந்துள்ள ஏ.பி.எம்.சர்ச் பகுதியில் சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட் ரோடு பகுதியில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் மறைந்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ராகுல் (வயது 22), திவாகர் (21), அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (24), புளியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வா (25), அம்மனூர் பகுதியை சேர்ந்த தர்மேஷ் (20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கஞ்சா விற்பனை தகராறு

விசாரணையில் அவர்கள் கொலை செய்யப்பட்ட ஜான் பிராங்ளின் அவரது நண்பர் கவுரி சங்கர் ஆகிய இருவரும் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கவுரி சங்கரின் மனைவியை ஜான் பிராங்ளின் கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கவுரி சங்கர் சென்னையிலேயே ஜான் பிராங்ளினை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இதனை அறிந்த ஜான் பிராங்ளின் சென்னையில் இருந்து தப்பி கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கவுரி சங்கர் கூட்டாளிகளான இவர்கள் ஜான் பிராங்ளினை கொலை செய்ததும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கவுரி சங்கர் உள்பட 4 பேரை தனிப் படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்