வெள்ளப்பெருக்கால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது: குமாரபாளையத்தில் 485 பேர் முகாம்களில் தங்க வைப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் சென்று ஆறுதல்
வெள்ளப்பெருக்கால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது: குமாரபாளையத்தில் 485 பேர் முகாம்களில் தங்க வைப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் சென்று ஆறுதல்
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் 485 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆறுதல் தெரிவித்தனர்.
தாழ்வான பகுதிகள்
கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி குமாரபாளையத்தில் தாழ்வான பகுதிகளான அண்ணா நகர், கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், சின்னப்பநாயக்கன் பாளையம், அங்காளம்மன் கோவில் பின்புறம், மேட்டுக்காடு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
485 பேர் முகாம்களில் தங்க வைப்பு
அவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நடராஜா திருமண மண்டபம், புத்தர் தெரு பள்ளி கட்டிடம், சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டது. தற்போது குமாரபாளையத்தில் 146 குடும்பங்களை சேர்ந்த 485 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முகாமிற்கு வந்தார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகர செயலாளர் செல்வம் மற்றும் தி.மு.க.வினர் உடன் சென்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே குமாரபாளையத்தையும், ஈரோடு மாவட்டம் பவானியையும் இணைக்கும் பழைய பாலம் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.