வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,795 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,795 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-25 17:32 GMT

திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் மலைஅடிவாரம் அருகில் உள்ள தனி வீடு ஒன்றில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அந்த பகுதியில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பதும், சாராய வியாபாரி என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் வள்ளிவாகை கிராமத்தில் உள்ள மாசிலாமணி என்பவர் வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதும், எரிசாராயம் கடத்தலுக்கு ஏஜெண்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாசிலாமணியின் வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பி ஓடி விட்டார்.

தொடர்ந்து மாசிலாமணி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 137 கேன்களில் இருந்த 4 ஆயிரத்து 795 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் வெங்கடேசனை போலீசார் கைது செய்து தலைமறைவான மாசிலாமணியை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்