475 லிட்டர் தரமற்ற பால் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் கடைகளில் தரமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 475 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் கடைகளில் தரமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 475 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தரமற்ற பால் விற்பனை
காரைக்குடி பகுதியில் பசும்பால் விற்பனை என்ற பெயரில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் தரமற்ற நிலையிலும், அதிகளவில் தண்ணீர் சேர்த்து விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள் காரைக்குடி செக்காலை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பசும்பால் விற்பனை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் செக்காலை ரோடு பகுதியில் உள்ள கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட பாலை ஆய்வு செய்தபோது அவை தரமற்ற நிலையில் அதிகளவு தண்ணீர் சேர்த்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 475 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதை தரையில் கொட்டி அழித்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வேல்முருகன் கூறியதாவது:- மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, இறைச்சி கடையில் விற்பனைக்காக வைக்கப்படும் இறைச்சிகளின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறோம். காரைக்குடி பகுதியில் விற்பனை செய்யப்படும் பால் தரமற்ற நிலையில் தண்ணீர் சேர்த்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை செய்தோம். பொதுவாக பாலின் தரம் குறித்து லாக்டோ மீட்டர் ஆய்வு செய்யும் போது தரமானதாக இருந்தால் அவை 25 முதல் 30 டிகிரி வரை காட்டும். ஆனால் இங்கு சோதனை செய்தபோது 20 முதல் 22 டிகிரி வரை காட்டியது. இதையடுத்து தரமற்ற நிலையில் இருந்த 475 லிட்டர் பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் இந்த பாலை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.