புதுக்கோட்டையில் 47 ஆயிரத்து 679 பேர் தேர்வு எழுதவுள்ளனர்
புதுக்கோட்டையில் வருகிற 24-ந்தேதி 186 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 47 ஆயிரத்து 679 பேர் எழுதவுள்ளனர்.
47 ஆயிரத்து 679 பேர் தேர்வு எழுதுகின்றனர்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-4) பதவிகளுக்கான தேர்வு வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 186 மையங்களில், மொத்தம் 47 ஆயிரத்து 679 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வாளர்கள் தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம், மின்வசதி மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா பஸ் நிலையத்திலிருந்தும் தேர்வுக் கூடங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
25 பறக்கும் படைகள்
தேர்வு நாளன்று தேர்வு கண்காணிப்பு பணிக்காக உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 25 பறக்கும்படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல 59 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், கால்குலேட்டர் மற்றும் மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.