4,620 கோடி ரூபாய் மோசடி: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது.இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியும் நான்காவது குற்றவாளியுமான சவுந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.தனசேகரன் முன்பாக நடைபெற்றது. அப்போது சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுந்தரராஜன் தானாக முன்வந்து சரணடைந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 96 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். புகாரை நிரூபிக்கும் வகையில் காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டும் ஜாமின் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால் வெளிநாடு தப்பிசெல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம் எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், சவுந்தரராஜனுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில் சவுந்தரராஜனுக்கு ஜாமின் வழங்க முடியாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.