சென்னையில் 63 இடங்களில் 452 டன் கட்டிட கழிவுகள் அகற்றம்; 'சுவீப்பர்' வாகனங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
சென்னை மாநகராட்சி தீவிர தூய்மை பணியில் 63 இடங்களில் 452.39 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் 78 ‘சுவீப்பர்’ வாகனங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
'சுவீப்பர்' வாகனங்கள்
சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுள்ள 471 பஸ் வசதி சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 சர்வீஸ் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள இந்த பஸ் வசதி சாலைகளில் மொத்தம் 78 மெக்கானிக்கல் 'சுவீப்பர்' வாகனங்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 கி.மீ அளவுக்கு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேயர் விழிப்புணர்வு
மாநகராட்சியின் சார்பில் நேற்று முன்தினம் 200 வார்டுகளில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது. மணலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் பிரியா, 'நமது குப்பை நமது பொறுப்பு' என்ற வகையில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன்படி நடைபெற்ற தீவிர தூய்மை பணிகளில் 283 பஸ் நிறுத்தங்களில் 3.37 டன், 128 பூங்காக்களில் 14.86 டன், 75 வழிபாட்டு தலங்களில் 4.63 டன், 37 ரெயில் நிலைய புறப்பகுதிகளில் 6.48 டன், 54 தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் 7.88 டன், மயான பூமிகள் அமைந்துள்ள 53 இடங்களில் 19.67 டன் மற்றும் இதர 28 இடங்களில் சுமார் 48.04 டன் என மொத்தம் 104.93 டன் அளவு உலர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
கட்டிட கழிவுகள்
இதேபோல் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ள 63 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் இருந்து 452.39 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன.
ஆஸ்பத்திரி மற்றும் இதர மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் 78 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணியில் 52.02 டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.