மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
45 பவுன் நகை
மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் உள்ள வரைவாளன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா, பாண்டிகோவில் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். அதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 45 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். கொள்ளை போன நகையின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் வீட்டின் அருகே உள்ள குமரன்நகரில் உள்ள ஒரு வீட்டிலும் 4 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.