பஸ் கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்
ஜெயங்கொண்டம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தனியார் பஸ் கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமண நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்த வரதராஜன்-தேவி தம்பதியினரின் மகள் மகேஸ்வரி. இவருக்கும், அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் செய்வதாக பேசி நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை செந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் நேற்று அதிகாலை கார்குடலில் இருந்து புறப்பட்டு செந்துறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர். பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர் ஓட்டினார். திருமணம் முடிந்தவுடன் மீண்டும் அவர்கள் கார்குடல் கிராமத்தை நோக்கி அதே பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
45 பேர் படுகாயம்
அவர்கள் சென்ற பஸ் தேவனூர் கல்வெட்டு என்ற கிராமத்தின் அருகே வளைவில் அதிவேகமாக சென்று திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து பஸ்சின் டிரைவர் முரளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கார்குடல் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அமிர்தவல்லி (வயது 50), அதே பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி(53), சின்னகோடி மலை நடுத்தெருவை சேர்ந்த துர்காராமன் மனைவி கர்ப்பிணியான கனிமொழி (27), பெரியவளவாடி மேலத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகள் இனியா (5), அன்னகாரன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சிவகங்கை (70), பெரியவளவாடி மேலத்தெருவை சேர்ந்த ஜெயபால் மனைவி வீரசுந்தரி (58), சின்னகோடி மலை துளசி மனைவி சாந்தி (45), அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி செல்வராணி (50), சின்னசேலம் அம்மா கொளத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா மனைவி வள்ளி (36) உள்பட 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு
காயம் அடைந்தவர்கள் வலியால் துடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பஸ் டிரைவர் முரளியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.