44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மேம்படுத்தப்படும் வசதிகள் பற்றி அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.

Update: 2022-07-23 00:10 GMT

சென்னை,

மாமல்லபுரத்தில் இம்மாதம் 28-ந்தேதி முதல் அடுத்த ஆகஸ்டு 10-ந்தேதிவரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் 22-ந்தேதி (நேற்று) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள்,

விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர்கள் விளக்கம்

மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதுகுறித்த விவரங்களை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தார். அதுபோல் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் எடுத்துரைத்தார்.

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் விட்டுச்செல்லவும், அங்கிருந்து அழைத்துச்செல்லவும் பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விளக்கினார். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ந்தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்-அமைச்சர் அறிவுரை

மேலும், செஸ் போட்டி குறித்து உலகெங்கும் உள்ள சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்கள் பெறும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளமும், செயலியும் உருவாக்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில், பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைபாடுமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும், போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு தேவையான போக்குவரத்து வசதியும், பார்வையாளர்கள் எவ்வித சிரமமின்றி போட்டியை காண்பதற்கு தேவையான வசதிகளையும் செய்ய வேண்டுமென்று அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது,

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலாளர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்